User Reviews for Uriyadi 2


Vanga blogalam : உறியடி 2 - URIYADI 2 - ஸ்டெர்லைட் நெடி ...
on

சாதாரண பின்புலத்திலிருந்து வந்து உறியடி மூலம் அனைவரையும் அட போட வைத்த விஜயகுமார் இப்போது தனது நடிப்பு , இயக்கத்தில் நடிகர் சூர்யா வுடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் உறியடி 2 . ஹீரோ , டைட்டில் , கொஞ்சம் சாதி அரசியல் தவிர இரண்டு படத்துக்கும் பெரிதான தொடர்பு இல்லை ...

சொந்த ஊரிலேயே பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தன் நண்பர்களுடன் கெமிக்கல் இன்ஜினியராக வேலைக்கு சேர்கிறார் லெனின் விஜய் ( விஜயகுமார் ) . சரியான பராமரிப்பு இல்ல்லாததால் அங்கிருந்து கசியும் விஷ வாயு நண்பன் , பெற்றோருடன் சேர்த்து கிராமத்தையே காவு வாங்குகிறது . இதற்கு காரணமான தொழிலதிபர் , அவருக்கு உடந்தையாக இருக்கும் அரசியல்வாதிகளை ஹீரோ எப்படி பழி வாங்குகிறர் என்பதே உறியடி 2 ...

வேலைக்கு போனாலும் கல்லூரி மாணவன் போலவே க்யூட்டாக இருக்கிறார் விஜயகுமார் . ஒரு பார்வையிலேயே காதலை சொல்லிவிடுவது அருமை . நண்பன் மெட்ராஸ் சென்ட்ரல் சுதாகரும் , அரசியல் வாதிகளில் சின்ன சாதிக் கட்சி தலைவராக வருபவரும் கவனிக்க வைக்கிறார்கள் . ஹீரோயினுக்கு இந்த படத்தில் டூயட்டோடு சேர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் கூடுதல் வேலையையும் கொடுத்திருக்கிறார்கள் . கோவிந்த் வசந்தா வின் பின்னணி இசை சில சமயம் கோரஸாக இரைந்தாலும் பெரும்பாலும் படத்திற்கு பலம் கூட்டுகிறது . படத்தில் அனைவரையும் ரொம்ப இயல்பாக நடிக்க வைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் ...

கல்லூரி மாணவர்களின் நட்புக்கிடையே புகும் சாதி அரசியலை தெளிவாக , தைரியமாக உறியடியில் சொன்ன விஜயகுமார் இதில் தொழிற்சாலையின் விஷ வாயு வெளியேற்றத்தால் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பை கையிலெடுத்திருக்கிறார் . ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி எல்லோரும் பணத்துக்கும் , அதிகாரத்துக்கும் அடிமை என்பதை தெளிவாக சொல்கிறார் .
விஷவாயுவால் மக்கள் பாதிக்கப்படும் ஸீன்களை மிக இயல்பாகவும் , நுட்பமாகவும் , டீட்லைல்டாக எடுத்திருப்பது ஹைலைட் ...

போலீஸ் வாடா என கூப்பிடும் போது என்னடா என்று விஜய் கேட்பது , பிணத்தில் கூட தனது சாதிக்காரனா என அரசியல்வாதி பார்ப்பது போன்ற சில ஸீன்கள் மட்டுமே ஜெர்க் . முதலில் ப்ராமிசிங்காக ஆரம்பிக்கும் படம் இடைவேளைக்கு பிறகு மக்கள் போராட்டம் , டிவி விவாதம் என ஸ்டர்லைட் நெடியோடு சுற்றி வருவது அயர்ச்சி . மாற்று அரசியல் , மக்கள் எழுச்சி எல்லாம் பேசி விட்டு க்ளைமேக்ஸில் பழிவாங்கலோடு படத்தை சப்பென்று முடித்து இதுக்கு ஏன்யா இத்தனை நேரமா டேபிள் சேரல்லாம் உடைச்சீங்க என கேட்க வைக்கிறார்கள் . படம் முடிந்து வரும் போது உறியடியை மீண்டும் பார்க்க வேண்டுமென தோன்றுவது உறியடி 2 க்கு பெரிய மைனஸ் ...

டிஸ்கி : ஸ்டெர்லைட் மேட்டரை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படத்தை தேர்தல் நேரத்தில் ரிலீஸ் செய்தால் சரியாக இருக்கும் என நினைத்திருப்பார்கள் போல ஆனால் படம் ஏப்ரல் 18 வரை ஓடுவது கடினமே ...

ரேட்டிங்க் : 2.75 */ 5 *

ஸ்கோர் கார்ட் : 42

0